×

வீரர், வீராங்கனைகளின் போராட்டத்துக்கு அடிபணிந்தது ஒன்றிய அரசு மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட்: விளையாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்தவர் பாஜ எம்பி பிரிஜ்பூஷண் சரண்சிங். உத்ரபிரதேசத்தை சேர்ந்த இவர் மீது சிறுமி உட்பட 7 வீராங்கனைகள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். நீதிமன்றம் தலையிட்ட பிறகு, பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். அதன்பிறகே அவர் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை இந்திய ஒலிம்பிக் கமிட்டி தற்காலிகமாக கவனித்து வருகிறது. இந்த நிலையில், பலமுறை தள்ளி வைக்கப்பட்டு சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் தேர்தலில் பிரிஷ்பூஷண் ஆதரவாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உ.பி.யைச் சேர்ந்த சஞ்ஜெய் சிங் குமார் ஏற்கனவே பிரிஜ்பூஷணின் உதவியாளராக இருந்தவர். வணிகப் பங்குதாரராகவும் உள்ளார். வெற்றி பெற்ற 15 பேரில் 13 பேர் பிரிஜ்பூஷணை நேரில் சந்தித்து மாலைகள் அணிவித்து கொண்டாடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இனி கூட்டமைப்பு நிர்வாகத்தை நம்ப முடியாது.

தங்கள் நியாயமான போராட்டம் பலனளிக்கவில்லை, ஒன்றிய அமைச்சர்கள் தந்த வாக்குறுதிகளும் காற்றில் பறந்து விட்டன என்று வருந்தினர். கூட்டமைப்பின் நிர்வாகத்தை பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக் வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கண்ணீருடன் தெரிவித்தார். முன்னணி வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்திர சிங் யாதவ் ஆகியோர் தங்கள் பத்மஸ்ரீ விருதையும், பதக்கங்களையும் திரும்ப ஒப்படைத்தனர். மல்யுத்த கூட்டமைப்பு சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தபோதும், ஒன்றிய அரசு வழக்கம்போல பாராமுகமாகவே இருந்தது.

இதற்கிடையில், கூட்டமைப்பின் புதிய தலைவர் சஞ்ஜெய் சிங், ‘15 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மல்யுத்த பயிற்சிமுகாம் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் உ.பி. மாநிலம் நந்தி நகர், கோண்டாவில் நடைபெறும்’ என்று அறிவித்தார். இதற்கு எதிர் முகாமில் இருந்து தேர்வான பிரேம் சந்த், ‘தேர்தல் முடிந்த பிறகு நடந்த முதல் கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. பயிற்சி முகாம் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப்புக்கான அறிவிப்புகள் வெளியிட உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை’ என்று புகார் தெரிவித்தார். இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பயிற்சி முகாம், தேசிய சாம்பியன்ஷிப் நடத்துவதாக மல்யுத்த கூட்டமைப்பு அவசரகதியில் அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் சட்ட விதிகள் மற்றும் தேசிய விளையாட்டு மேம்பாட்டு வழிமுறைகளை புதிய நிர்வாகிகள் குழு அப்பட்டமாக மீறி உள்ளது. எனவே மறு உத்தரவு வரும்வரை கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க அறிவுறுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. முன்னணி வீரர், வீராங்கனைகள் ஒருவர் பின் ஒருவராக தங்களின் விருதுகள், பதக்கங்களை திருப்பிக்கொடுப்பதாக அறிவிப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி வருவதால், அவர்களின் எதிர்ப்புக்குப் பணிந்தே ஒன்றிய அரசு இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை ஏற்கனவே இடைநீக்கம் செய்துள்ள சர்வதேச கூட்டமைப்பு, அந்த தடையை விலக்கிக்கொள்வது குறித்து அதிகாரப்பூவமாக இது வரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதில் உள்ள சிக்கலும் நீடிக்கிறது. தற்காலிக குழு: இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்க வலியுறுத்தி ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விதிமீறல்கள்…

* கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்துக்கான தேதி 15 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட வேண்டும். கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.

* அவசர கூட்டம் நடத்துவதாக இருந்தால் கூட, 7 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பது அவசியம்.

* இதற்கான அறிவிப்புகளை பொதுச் செயலாளர் தான் அறிவிக்க வேண்டும்.

* மேற்கண்ட எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் தேசிய போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், பாலியல் தொல்லைகள் தரப்பட்டதாக வீராங்கனைகள் புகார் தெரிவித்த அதே கட்டிடத்தில் இருந்தே புதிய நிர்வாகமும் இயங்குவதும் தவறு என வீரர், வீராங்கனைகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post வீரர், வீராங்கனைகளின் போராட்டத்துக்கு அடிபணிந்தது ஒன்றிய அரசு மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட்: விளையாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Union State Wrestling Federation ,Ministry of Sports Action ,New Delhi ,Union Sports Ministry ,Indian Wrestling Federation ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...